தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருந்து ஒரு லட்சம் டன் கொப்பரை கொள்முதல்: மத்திய அரசு அனுமதி
தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருந்து ஒரு லட்சம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து 2020-2021-ம் ஆண்டுக்கான ‘காரீப்’ பருவ விவசாய விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் தொடர்ந்து கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கொள்முதல் பணிகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த செப்டம்பர் 24-ந் தேதியில் இருந்து அக்டோபர் 11-ந் தேதி வரை 3 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 4 மில்லியன் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண்துறையின் பண்ணை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த ஆண்டைவிட 33 சதவீதம் அதிகம். இதுதவிர, அக்டோபர் 11-ந் தேதி வரை 2 வித பருப்பு வகைகள் 606.56 டன் அளவுக்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்பு ரூ.4.36 கோடி ஆகும்.
மேலும் தமிழகம், கர்நாடகம், குஜராத் உள்பட 10 மாநிலங்கள் 3.70 மில்லியன் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை வாங்க விடுத்த கோரிக்கைக்கும், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் 1 லட்சம் டன் கொப்பரை கொள்முதலுக்கு விடுத்த கோரிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Related Tags :
Next Story