இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் டாக்டர் அப்துல் கலாம் - பிரதமர் மோடி


இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் டாக்டர் அப்துல் கலாம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Oct 2020 5:00 AM GMT (Updated: 15 Oct 2020 5:00 AM GMT)

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) ஆகியவற்றில் அவர் அளித்த அயராத பங்களிப்பின் காரணமாக அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ஜைனுலாப்தீன்-ஆஷியம்மா தம்பதிக்கு 5வது மகனாக பிறந்தவர் அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் பள்ளிப்படிப்பை முடித்த கலாம், திருச்சி தூய வளன் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார்.

இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் ஏவுகணை திட்டங்கள் மற்றும் செயற்கைகோள் திட்டங்களில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் அணுஆயுத பரிசோதனையில் கலாம் முக்கிய பங்காற்றினார். இந்த அணுஆயுத சோதனைக்கு பின்னர் உலக அரங்கில் இந்தியா தனிப்பெரும் அணுஆயுத சக்தியாக உருப்பெற்றது.

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பணியாற்றிய போதும், மாணவர்களோடு அதிகம் உரையாடுவதை விரும்பினார் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்குவதற்காக மாணவர்கள் அயராது உழைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். மாணவர்களால் போற்றப்படும் ஆசிரியராகவும், மக்களால் நேசிக்கப்படும் தலைவராகவும் விளங்கி வருகிறார் டாக்டர் அப்துல் கலாம்.

இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் குடியரசு தலைவராகவும், தலைசிறந்த விஞ்ஞானியாகவும் விளங்கிய டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் வளர்ச்சிக்கு தனது அழியாத பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story