பா.ஜனதா அரசை வெற்றிபெற விடக்கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்


பா.ஜனதா அரசை வெற்றிபெற விடக்கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2020 3:00 AM IST (Updated: 19 Oct 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா அரசு தனது ஜனநாயக விரோத செயல்களில் வெற்றிபெற விடக்கூடாது என்று காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில காங்கிரசின் மேலிட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஜனநாயகம் மிகவும் சிக்கலான தருணத்தில் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் நலன்களை சில தொழிலதிபர்களின் கைகளில் திணிக்க விரும்பும் அரசு, இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது.

விவசாய தொழிலாளர்கள், மண்டிகளில் வேலை செய்யும் ஏழைகள், பெட்டி கடைக்காரர்கள் ஆகியோருக்கு எதிராக இந்த அரசு போர் தொடுத்துள்ளது. அரசின் இந்த சதியை முறியடிக்க ஒன்றாக பாடுபட வேண்டியது நமது கடமை.

இந்த சவால்களை முறியடிக்க நீங்கள் கடினமாக பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன். பா.ஜனதா அரசு, தனது ஜனநாயக விரோத, தேசவிரோத செயல்களில் வெற்றிபெற விடக்கூடாது.

கொரோனாவையும் இந்த அரசு மோசமாக கையாள்கிறது. 21 நாட்களில் கொரோனாவை முறியடிப்பதாக பிரதமர் கூறினார். ஆனால், இப்போது நாடு தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளுமாறு விட்டு விட்டார். தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டார். கொரோனாவை ஒடுக்க எவ்வித கொள்கையோ, வியூகமோ அரசிடம் இல்லை.

காங்கிரஸ் அரசின் தொலைநோக்கு பார்வையாலும், மக்களின் கடின உழைப்பாலும் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த வலிமையான பொருளாதாரத்தை அரசு முற்றிலும் அழித்து விட்டது.

பொருளாதாரம் இந்த அளவுக்கு எப்போதும் வீழ்ந்தது இல்லை. 14 கோடி பேர் வேலை இழந்து விட்டனர். சிறு வணிகர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோய் விட்டது. ஆனால், அரசு கவலைப்படவில்லை.

ஜி.எஸ்.டி. வருவாயில் மாநிலங்களின் பங்கை தரவில்லை. இது, அரசியல் சட்ட மீறலுக்கு புதிய உதாரணம். பட்டியல் இன சகோதர, சகோதரிகள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பத்தினரின் குரல்களை நசுக்குகிறார்கள். இது என்னவகை ராஜதர்மம்?

இவ்வாறு அவர் பேசினார்.

பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நேரத்தில் இக்கூட்டம் நடந்துள்ளது.


Next Story