இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை


இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2020 11:46 PM GMT (Updated: 16 Nov 2020 11:46 PM GMT)

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடங்கியது. சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2 மாத முழு ஊரடங்குக்கு பிறகு மே 25-ந் தேதி முதல் நாம் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கினோம். அந்த நேரத்தில் சுமார் 30 ஆயிரம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதாவது தீபாவளிக்கு முந்தைய நாட்களில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் 70 சதவீத விமானங்களை இயக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பர் 31-ந் தேதிக்குள் அல்லது அதற்கு அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுவோம் என நான் நம்புகிறேன். அதே சமயம் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு சென்றாலும் தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.


Next Story