கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி: மத்திய பட்ஜெட்டுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் பாராட்டு


பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா
x
பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா
தினத்தந்தி 1 Feb 2021 9:22 PM GMT (Updated: 2 Feb 2021 7:24 AM GMT)

2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நடவடிக்கைக்கு கோவேக்சின் தடுப்பூசி தயாரித்து வழங்கிய பாரத் பயோடெக் நிறுவனம் பாராட்டு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2021-22-ம் ஆண்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, முன்னோக்கிய மிகப்பெரிய ஒரு அடி மட்டுமின்றி, தொலைநோக்கு சார்ந்த பட்ஜெட் அறிவிப்பாகும். கொரோனாவை தடுப்பதற்காக மிகப்பெரிய நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம், கொரோனா இல்லா இந்தியாவாக மாறும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தேசிய சுகாதார திட்டத்துடன் கூடுதலாக ரூ.64,180 கோடி சுகாதார திட்டம் ஒன்றையும் அறிவித்திருப்பதை வரவேற்றுள்ள எல்லா, இது பொது சுகாதார திட்டங்களை வலுப்படுத்தும் என தெரிவித்து உள்ளார். நோய் தடுப்பு சுகாதாரம், குணமாக்கும் சுகாதாரம் மற்றும் உடல் நல்வாழ்வு போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மைல்கல் பட்ஜெட் மூலம் ஆரோக்கியத்தை நாட்டின் எதிர்கால வெற்றியின் மூலைக்கல்லாக மாற்றும் நோக்கத்தை அரசு அடையாளம் காட்டியிருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story