பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட்: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து
பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பல்வேறு அறிவிப்புகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்ல இந்த பட்ஜெட் ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். கொரோனா பரவலுக்கு மத்தியில் இதைவிட ஒரு சிறப்பான பட்ஜெட்டை எதிர்பார்க்க முடியாது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த பட்ஜெட், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை சீர் செய்யவும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம்.
மெட்ரோ ரெயில் திட்டம்
விவசாயத்துறையை பலப்படுத்துதல், திறன் மேம்பாடு, கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் விருப்பப்படி விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக அதிகரிக்க இந்த பட்ஜெட் உதவும். விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் சந்தைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நுண்ணிய நீர்ப்பாசன திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். ரெயில்வே வளர்ச்சிக்கு ரூ.1.07 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு ரூ.14 ஆயிரத்து 778 கோடி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
இந்த நிதி ஒதுக்கீடு காரணமாக பெங்களூருவில் கூடுதலாக 58 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடியும். இது கர்நாடகத்திற்கு மிகப்பெரிய பரிசாகும். பாரத் மாலா திட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ.3.30 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பஸ் போக்குவரத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. இது நகரங்களில் வாகன நெரிசலை குறைக்க உதவும். சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதை வரவேற்கிறேன்.
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த மக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது. மொத்தத்தில் இந்த பட்ஜெட், பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட். அத்துடன் வளர்ச்சி திட்டங்களுக்கு வேகம் கொடுப்பதாகவும் பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story