4 மாதங்களாக தொற்று பாதிப்பு இறங்குமுகம்: கொரோனாவுக்கு 162 டாக்டர்கள், 107 நர்சுகள் பலி; மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
கொரோனாவுக்கு இதுவரை 162 டாக்டர்களும், 107 நர்சுகளும் பலியாகி இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தெரிவித்தார்.
162 டாக்டர்கள் பலி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கொரோனாவுக்கு இதுவரை எத்தனை சுகாதார பணியாளர்கள் இறந்துள்ளனர் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 162 டாக்டர்களும், 107 நர்சுகளும், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) 44 பேரும் பலியாகி உள்ளனர். இவை, கடந்த மாதம் 22-ந் தேதிவரை மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காப்பீட்டு தொகை
மற்ற கேள்விகளுக்கு அஸ்வினி குமார் சவுபே கூறியதாவது:-
பலியான சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகை சரியாக பெற்றுத்தரப்படுகிறது. பலியான சுகாதார பணியாளர் வேலை பார்த்த நிறுவனம், அவர் கொரோனாவுக்கு பலியானதாக சான்றளிக்க வேண்டும்.
அத்துடன், தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்கள், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இழப்பீடு பெறப்படுகிறது.
இறங்குமுகம்
இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. குணமடைந்தவர்கள் விகிதம் 97 சதவீதமாகவும், பலியானோர் விகிதம் 1.44 சதவீதமாகவும் உள்ளது.
10 லட்சம் மக்கள்தொகைக்கு 7 ஆயிரத்து 778 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் வீதம் பலியாகி உள்ளனர். இது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
ஆரோக்கிய சேது
பரிசோதனை, தொடர்புடையவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், முறையான சிகிச்சை அளித்தல் ஆகியவை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செய்யப்பட்டன.அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
அதிக பாதிப்பு நிறைந்த பகுதிகளை அடையாளம் காண மின்னணு முறையை மாநில அரசுகள் பயன்படுத்தின. தொற்று பாதித்தவர்களை கண்டறிய ‘ஆரோக்கிய சேது’ செயலி பெரிதும் பயன்பட்டது.
இவ்வாறு அஸ்வினி குமார் சவுபே கூறினார்.
Related Tags :
Next Story