முல்லைப்பெரியாறு அணை வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
புதுடெல்லி,

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் வேறு சில வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளதால் விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரினார். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தே, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்குமாறு கோரினார்.
இதை ஏற்ற நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.