25 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2021 9:34 PM IST (Updated: 5 April 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

25 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 47,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,57,885 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 155 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,033 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் 25 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார். மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி பெற அனுமதிக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் புதிய தடுப்பூசி மையங்களைத் திறப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வு மற்றும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடுவதற்கான வயது வரம்பில் தளர்வுகளுடன், அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிய மையங்களைத் திறப்பதற்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டால், டெல்லி அரசு அனைத்து டெல்லி குடியிருப்பாளர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி போடுவதற்கான சூழல் உருவாகும் என்றும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். 




Next Story