மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியின் கார் மீது பயங்கர தாக்குதல்; திரிணாமுல் காங்கிரசார் மீது குற்றச்சாட்டு


மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியின் கார் மீது பயங்கர தாக்குதல்; திரிணாமுல் காங்கிரசார் மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 May 2021 12:14 AM GMT (Updated: 7 May 2021 12:14 AM GMT)

மேற்கு வங்காளத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட பா.ஜனதாவினரை பார்க்க சென்ற மத்திய மந்திரி முரளீதரனின் வாகன அணிவகுப்பு மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

வன்முறை அதிகரிப்பு

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தோ்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இந்த தேர்தலுக்குப்பின் அங்கு அரசியல் வன்முறைகள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக பா.ஜனதாவினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களது வீடுகளை சூறையாடுவதும் அதிகரித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்தும் உள்ளனர். வன்முறையில் பாதித்த பா.ஜனதாவினரை கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதலும் கூறி வருகின்றனர்.

மர்ம கும்பல் தாக்குதல்

அந்தவகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் நேற்று மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பஞ்ச்குரி கிராமத்தில் வீடுகள் சூறையாடப்பட்ட பா.ஜனதாவினரை சந்திக்க சென்றாா். அப்போது முரளீதரனின் வாகன அணிவகுப்பை மர்ம கும்பல் ஒன்று தாக்கியது. இதில் ஒரு சிலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரசார் இருப்பதாக முரளீதரன் குற்றம் சாட்டியுள்ளார். 

அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

திரிணாமுல் காங். குண்டர்கள்

தாக்குதல் மற்றும் வீடு சூறையாடலுக்கு உள்ளான பா.ஜனதா தொண்டர்களை சந்திப்பதற்காக மேற்கு மிட்ானப்பூர் சென்றிருந்தேன். அங்கு ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு எனது வாகன அணிவகுப்பு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் எங்களை நோக்கி வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நான் பாதுகாப்பாக தப்பினேன். ஆனால் எனது டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. சில கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு்ள்ளன.இந்த தாக்குதலின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் உள்ளனர்.

இவ்வாறு முரளீதரன் குறிப்பிட்டு உள்ளார்.

போலீசார் முன்னிலையில்...

இதைப்போல போலீசாரின் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் அரங்கேறியதாக முரளீதரனுடன் சென்றிருந்த பா.ஜனதாவின் தேசிய செயலாளர் ராகுல் சின்கா குற்றம் சாட்டினார். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீதான தொடர் வன்முறை சம்பவங்களால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 


Next Story