ரஷியாவில் இருந்து வந்த 30 லட்சம் ‘டோஸ்’ ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

ரஷியாவில் இருந்து 30 லட்சம் ‘டோஸ்’ ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்து சேர்ந்தது.

ஐதராபாத்,

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் 12.5 கோடி டோஸ்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தனது ஒப்புதலை வழங்கி விட்டது.

இந்த தடுப்பூசியின் 2 லட்சம் டோஸ்களை ஏற்கனவே டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த தடுப்பூசிகளை அந்த நிறுவனம், அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வழங்கி, பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் ரஷியாவில் இருந்து ‘ஆர்யு-9450 ’ என்ற தனி சரக்கு விமானம் மூலம் 30 லட்சம் ‘டோஸ்’ ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்று காலை 3.43 மணிக்கு ஐதராபாத் விமான நிலையம் வந்திறங்கியது.

இதை ஐதராபாத் விமான நிலைய சரக்ககம் ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த தடுப்பூசிகளைப் பொறுத்தமட்டில் அவற்றை மைனஸ் 20 டிகிரி வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story