உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுமா? - தேர்தல் ஆணையம் விளக்கம்

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த தயாராக உள்ளதாகவும், கொரோனா காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அனுபவத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா கூறினார்.
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைகளின் நடப்பு ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலும், உத்தரபிரதேச சட்டசபையின் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்திலும் முடிவடைகின்றன.
இந்நிலையில், இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படுமா அல்லது கொரோனா 2-வது அலை காரணமாக சில மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிப்போடப்பட்டதைப் போல ஒத்திவைக்கப்படுமா என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திராவிடம் நேற்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:-
‘சட்டசபைகளின் காலம் முடியும் முன்பு தேர்தலை நடத்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை கவர்னர்களிடம் ஒப்படைப்பது தேர்தல் ஆணையத்தின் முக்கியமான கடமை.
தற்போது கொரோனா 2-வது அலையின் வேகம் தணிந்து வருவதுடன், தொற்றுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் நாங்கள் பீகார் மாநிலத்திலும், சமீபத்தில் 5 மாநிலங்களிலும் தேர்தலை நடத்தி அனுபவம் பெற்றுள்ளோம்.
கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். அதற்கு தேர்தலை ஆணையம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியும், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெறுகின்றன. இந்த மாநிலங்களில் மொத்தமாக 17.84 கோடி வாக்காளர்கள் வாக்குச் செலுத்த உள்ளனர். அதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 14.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story