கொரோனா பரவல் எதிரொலி: மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Jun 2021 4:00 AM IST (Updated: 4 Jun 2021 4:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

மும்பை, 

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் மாநில பாடத்திட்டங்களின் கீழ் செயல்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

அந்த வகையில் மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் யோசனையை கோரி இருப்பதாக கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியிருந்தார். முன்னதாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து மராட்டிய அரசு அறிவித்து இருந்தது

இந்நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு மந்திரி விஜய் வடேடிவார் நிருபர்களிடம் கூறுகையில், "12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்வை ரத்து செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது" என்றார்.

இந்தநிலையில் கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர், “12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மராட்டிய அரசு ரத்து செய்துள்ளது. இந்தநிலையில் மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது எப்படி, பொதுநுழைத்தேர்வு மற்றும் இதர நுழைவு தேர்வு விவகாரங்கள் குறித்து விரைவில் கல்வித்துறை முடிவு எடுக்கும்.

மாணவர்கள், பெற்றோர்களின் பதற்றத்தை உணர்ந்து உள்ளோம். அதனை அறிந்து தேர்வு விஷயத்தில் முடிவு எடுத்துள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார். 

Next Story