காஷ்மீரில் விமானப்படை தளம் மீது தாக்குதல்: வழக்கு என்.ஐ.ஏ-க்கு மாற்றம்


காஷ்மீரில் விமானப்படை தளம் மீது தாக்குதல்: வழக்கு என்.ஐ.ஏ-க்கு மாற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2021 4:36 AM GMT (Updated: 29 Jun 2021 4:36 AM GMT)

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானப்படை தளம் மீது டிரோன்கள் மூலமாக பயங்கரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு,

காஷ்மீரில் ஜம்முவில் விமான நிலைய வளாகத்துக்குள் இந்திய விமானப்படை தளம் உள்ளது. விமானப்படையின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படும் 2 டிரோன்கள், ஜம்மு விமானப்படை தளத்தை நோக்கி வந்தன. விமான தளத்துக்கு மேலே வந்தவுடன், டிரோன்களில் இருந்த 2 குண்டுகள், விமான தளத்தின் மீது போடப்பட்டன.

6 நிமிட இடைவெளியில், 2 குண்டுகளும் அடுத்தடுத்து விழுந்தன. ஒரு குண்டு, தொழில்நுட்ப பகுதியில் உள்ள ஒற்றை மாடி கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டிடத்தின் கூரை சேதமடைந்தது. மற்றொரு குண்டு, திறந்தவெளி பகுதியில் விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானப்படை வீரர்கள் அரவிந்த் சிங், எஸ்.கே.சிங் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். நல்லவேளையாக உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ இல்லை.

தகவல் அறிந்தவுடன், டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் விமானப்படை தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு விசாரணையை மேற்பார்வையிட்டனர்.

விமானப்படை, சிறப்பு படைகள் ஆகியவற்றின் விசாரணை குழுக்களும் நேரில் வந்து விசாரணையில் ஈடுபட்டன. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். டிரோன்கள் எந்த பாதை வழியாக வந்தன என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜம்மு விமானப்படை தளம், சர்வதேச எல்லையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. எனவே, பாகிஸ்தான் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

தாக்குதல் குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஞாயிறு அதிகாலையில் குறைந்த திறன் கொண்ட 2 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஒரு குண்டுவெடிப்பால் கட்டிடத்தின் கூரையில் லேசான சேதம் ஏற்பட்டது. மற்றொரு குண்டு, திறந்தவெளி பகுதியில் வெடித்தது. எந்த சாதனத்துக்கும் சேதம் இல்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காஷ்மீரில் விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.  

Next Story