டிரோன் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கை நிராகரிக்க முடியாது-ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி

ஜம்மு விமானப் படை நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு,
ஜம்மு விமானப் படை நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்முறையாக நடைபெற்ற இம்மாதிரியான தாக்குதல் தொடர்பான விசாரணையை தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) ஏற்றுள்ளது.
இந்நிலையில் கதுவா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங், நிருபர்களிடம் கூறியதாவது:-
‘ஜம்மு விமானப் படை நிலையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் வெடிகுண்டு தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு மிகவும் தீவிரமான, வலுவான சந்தேகம் இருக்கிறது. அந்த அமைப்பின் தொடர்பு இருந்தால், அது பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் நிலையில், இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கையும் நிராகரிக்க முடியாது. ஆனால் எந்த அளவுக்கு இதில் பாகிஸ்தான் அரசு அமைப்புகளின் தொடர்பு இருக்கிறது என்பது விசாரணை மேலும் தொடரும்போதுதான் தெரியவரும்.
ஜம்மு விமானப் படை நிலையத்தின் மீதான இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்பு, அதிகபட்ச உயிர்ப்பலியை ஏற்படுத்தும் நோக்கில், ஜம்முவில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் கைது செய்த ஒரு பயங்கரவாதி அளித்த தகவலின் அடிப்படையில், வெடிகுண்டை கண்டுபிடித்து அகற்றிவிட்டோம். ஜம்மு விமானப் படை நிலைய தாக்குதலுக்கும், பொது இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தற்போதையநிலையில் என்னால் கூறமுடியாது. ஆனால் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இதற்கு முன்பு டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் போன்றவை போடப்பட்டபோது, அவை 10 முதல் 15 கி.மீ. தூரம் பறந்து வந்திருப்பது தெரியவந்தது. ஜம்மு விமானப் படை நிலையம், சர்வதேச எல்லையில் இருந்து அந்த தூரத்துக்குள்தான் உள்ளது. அந்த டிரோன் பறந்து வந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் வழித்தடமும் 15 கி.மீ. தொலைவு உடையதுதான். அது எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்துதான் வந்திருக்கலாம் என்றாலும், தற்போதைக்கு மற்ற கோணங்களையும் மறுக்க முடியாது.
டிரோன் மூலமான தாக்குதல் என்பது மிகவும் தீவிரமான அபாயம். இந்நிலையில், முக்கிய இடங்கள், முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story