ஹபீஸ் சயீத் வீடு அருகே குண்டுவெடிப்பில் தொடர்பு: பாகிஸ்தான் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜமா-உத்-தவாவின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் வீடு லாகூரில் உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே கடந்த 23-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பை நடத்தியது ஒரு இந்தியர் எனவும், அவருக்கு இந்திய உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கூறுவது புதிது அல்ல. பாகிஸ்தான் தனது சொந்த நாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், அதன் மண்ணிலிருந்து வெளிவரும் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பான சரணாலயங்களை ஏற்படுத்தியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதில் இந்த முயற்சியை செலவிடுவது நல்லது’ என்று தெரிவித்தார். பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் நற்சான்றிதழ்களை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருக்கிறது என்று கூறிய பாக்சி, ஒசாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளை ‘தியாகிகள்' என்று மகிமைப்படுத்தும் அதன் சொந்த தலைமையைத் தவிர வேறு யாரும் இதை ஏற்பதில்லை எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story