ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் வட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இவற்றில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. எனினும், டெல்லியில் மழை பொழிவு இல்லை.
இதில், ராஜஸ்தானில் பல பகுதிகளில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட இடி, மின்னல் தாக்குதலில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவர். அவர்களில் ஜெய்ப்பூரில் அமீர் கோட்டை அருகே மலை பகுதியில் செல்பி எடுத்து கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள். இதுதவிர 6 குழந்தைகள் உள்பட 21 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி ஜெய்ப்பூர் காவல் ஆணையாளர் அனந்த ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அமீர் கோட்டையில் மின்னல் தாக்கிய 29 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story