கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்


கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 July 2021 2:29 AM GMT (Updated: 17 July 2021 2:29 AM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருவனந்தபுரம், 

கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மாத பூஜைகள் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடைபெற்று வந்தது. இதனிடையே கேரள அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்த சூழலில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

முன்னதாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மேலும் கொரோனா நெறிமுறைகள் முழுவதுமாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் என்றும், அனைத்து வித கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

மேலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது, சானிடைசர் வைத்திருப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story