கொரோனா காலத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு


கொரோனா காலத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 23 July 2021 7:46 PM GMT (Updated: 2021-07-24T01:16:58+05:30)

கொரோனா காலத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கொரோனா காலத்தில் பட்டாசு விற்பனை, வெடிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு விசாரித்தது.

பட்டாசு விற்பனை, வெடிப்பதற்கு தடை
அதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

டெல்லி, தேசிய தலைநகர் பகுதிகளிலும், 200-க்கும், அதற்கும் அதிமாக காற்றின் தர குறியீடு பதிவாகும் நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் கொரோனா காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ஒட்டுமொத்த தடை விதிக்கப்படுகிறது.மிதமான காற்று தரக் குறியீடு உள்ள மாநகரங்கள், நகரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

அபராதம் விதிக்கலாம்
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு காற்று தர கண்காணிப்பு மையத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வோர், வெடிப்பவர்கள் மீது மாவட்ட கலெக்டர்கள் அபராதம் விதிக்கலாம்.வசூலிக்கப்படும் அபராத தொகையை மாவட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை
இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தரபிரதேச உத்யோக் வியாபார் பிரதிநிதி மண்டல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா ஆஜராகி, அர்ஜுன் கோபால் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு அமைந்துள்ளது என வாதிட்டார்.மற்றொரு வக்கீல் சாய் தீபக் ஆஜராகி, ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் காற்று மாசுக்கான 15 
காரணிகளில் பட்டாசு வெடிப்பது இடம்பெறவில்லை. பசுமை தீர்ப்பாய உத்தரவால் பட்டாசு தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

தடை செல்லும்
அப்போது நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை அறிய ஐ.ஐ.டி. உதவி தேவையா? இது எல்லோரும் அறிந்த விஷயம் என்றனர்.பின்னர் நீதிபதிகள், கொரோனா காலத்தில் பட்டாசு விற்பனை, தடைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு செல்லும் என்றும், பட்டாசு தயாரிப்பதற்கான தடை குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்து, மேல்முறையீட்டு மனுக்கள் தகுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று கூறி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story