பயங்கரவாதிகளுக்கு டிரோன் மூலம் பாகிஸ்தான் ஆயுதம், பணம் வினியோகம்: காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி


பயங்கரவாதிகளுக்கு டிரோன் மூலம் பாகிஸ்தான் ஆயுதம், பணம் வினியோகம்: காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி
x
தினத்தந்தி 25 July 2021 11:20 PM IST (Updated: 25 July 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு டிரோன் மூலம் ஆயுதங்களையும், பணத்தையும் பாகிஸ்தான் வினியோகித்து வருகிறது என்று காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

ஆயுத பற்றாக்குறை
காஷ்மீரில், ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி, 2 டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து, காஷ்மீரில் டிரோன்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 23-ந் தேதி, பாகிஸ்தானில் இருந்து 5 கிலோ வெடிகுண்டுடன் ஒரு டிரோன் வந்தது. சர்வதேச எல்லையில் அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இந்தநிலையில், இந்த பின்னணி குறித்து காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக் சிங் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது:-
காஷ்மீரில் உள்ள லஷ்கர் இயக்கம், ஜெய்ஷ் இ முகமது ஆகிய பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுத சப்ளை செய்து வந்த நபர்களில் பெரும்பாலானோரை கடந்த ஆண்டு கைது செய்து விட்டோம். அதனால், அந்த பயங்கரவாத இயக்கங்கள் ஆயுத பற்றாக்குறையில் தவித்தன.

பாகிஸ்தான்
அந்த நிலையில்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பாகிஸ்தான் அரசுத்தரப்பை சேர்ந்த சிலர், பயங்கரவாதிகளின் தேவையை பூர்த்தி செய்ய டிரோன்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், பணம் ஆகியவற்றை அனுப்பி வைக்க தொடங்கினர்.கடந்த பிப்ரவரி மாதம், இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும், சர்வதேச எல்லை பகுதியிலும் அமைதியை கடைபிடிக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதையும் மீறி, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுதங்களை அனுப்பி வருகிறது.

சந்தையில் வெடிக்க திட்டம்
கடந்த 23-ந் தேதி, சர்வதேச எல்லையில் இந்திய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனில் இருந்த வெடிகுண்டு, பயன்படுத்த தயார்நிலையில் இருந்தது. அந்த வெடிகுண்டை ஒரு சந்தையில் வெடிக்க வைத்து பலத்த உயிரிழப்பை ஏற்படுத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டு இருந்ததாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.அந்த டிரோனின் சில பாகங்கள், சீனா மற்றும் தைவானில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. அந்த டிரோனுக்கும், ஓராண்டுக்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனுக்கும் சீரியல் எண்ணில் ஒற்றை இலக்க வேறுபாடுதான் உள்ளது.டிரோன்கள், பாதுகாப்பு படைகளுக்கு புதிய 
அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. அவற்றை உறுதியுடன் முறியடிக்க அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான், முதன்முதலாக டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது, அவை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதற்கு பிறகு எதிர்நடவடிக்கைகள் எடுப்பதில் திறன் பெற்று விட்டோம். இதுவரை 41 தடவை டிரோன்கள் வந்துள்ளன. 33 தடவை இடைமறித்து தடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story