அனில் தேஷ்முக் மீதான விசாரணைக்கு மராட்டிய அரசு ஒத்துழைக்கவில்லை; ஐகோர்ட்டில், சி.பி.ஐ. குற்றச்சாட்டு

முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீதான விசாரணைக்கு மராட்டிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
சி.பி.ஐ. விசாரணை
மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் உள்ளிட்ட ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்த விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இந்தநிலையில் போலீஸ் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு கடந்த 22-ந் தேதி அனுமதி
அளித்தது.
ஒத்துழைக்கவில்லை
இந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணைக்கு மராட்டிய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் கூறுகையில், “ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகு சி.பி.ஐ. கடந்த 23-ந் தேதி மாநில புலனாய்வு துறை ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா அனுப்பிய தகவல்கள், இடமாற்றம் மற்றும் பதவி வழங்கப்பட்டது குறித்த ஆவணங்களை கோரி இருந்தது. ஆனால் கடந்த 27-ந் தேதி போலீஸ் உதவி கமிஷனர் நிதின் ஜாதவ் அனுப்பிய பதிலில் ஆவணங்கள் மற்றொரு விசாரணையின் பகுதி என்பதால் அதை ஒப்படைக்க முடியாது என மறுத்துவிட்டார்” என்று கூறியது.
Related Tags :
Next Story