ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்தியதற்கு இந்தியா எதிர்ப்பு


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்தியதற்கு இந்தியா எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 July 2021 4:13 AM IST (Updated: 30 July 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்தியது, சட்டவிரோத ஆக்கிரமிப்பை மூடி மறைக்கும் முயற்சி என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முறைகேடு குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 25-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. அக்கட்சி ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக இந்தியாவின் உதவியை நாடப்போவதாக நவாஸ் ஷெரீப் கட்சி வேட்பாளர் ஒருவர் தெரிவித்தார். அவருக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மூடி மறைக்க முயற்சி
இந்தநிலையில், தேர்தல் நடத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிந்தம் பக்ஷி நேற்று நிருபர்களுக்கு அளித்த 
பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசு தேர்தல் என்ற பெயரில் நடத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துக்கொள்கிறது. இந்த ஒப்பனை வேலைக்கு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த தேர்தலை உள்ளூர் மக்களே நிராகரித்துள்ளனர். இந்திய பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததையும், அங்கு செய்த மாற்றங்களையும் மூடி மறைக்கும் முயற்சியாக பாகிஸ்தான் தேர்தல் நடத்தி இருக்கிறது.

வெளியேற வேண்டும்
ஆனால், சட்டவிரோத ஆக்கிரமிப்பையோ, அங்கு நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களையோ, மக்களின் சுதந்திரத்தை பறித்ததையோ, சுரண்டலையோ தேர்தல் நடத்துவதன் மூலம் மூடி மறைத்துவிட முடியாது.இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆகவே, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story