வங்காளதேச வன்முறையை கண்டித்து இஸ்கான் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !


வங்காளதேச வன்முறையை கண்டித்து இஸ்கான் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !
x
தினத்தந்தி 17 Oct 2021 9:28 PM GMT (Updated: 17 Oct 2021 9:28 PM GMT)

வங்காளதேசத்தில் இஸ்கான் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்கான் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொல்கத்தா,

வங்காளதேசத்தில் உள்ள இஸ்கான் கோயில் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள்  தாக்குதல்  நடத்தினர். இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாயாபூர்  மற்றும் கொல்கத்தாவிலுள்ள இஸ்கான் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி,  கீர்த்தனைகள் பாடி,  'ஹரே கிருஷ்ணா' கோஷமிட்டனர்.

கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை உயர் ஆணைய அலுவலகத்தின்  வெளியே அவர்கள் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.போராட்டக்காரர்கள் பலர் வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கோரும் சுவரொட்டிகளை கையில் வைத்திருந்தனர்.

வங்காளதேசத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்கான் உறுப்பினர்கள் திங்கட்கிழமை அன்று  வங்காளதேச நாட்டின் அனைத்து தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், உயர் ஆணையங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக கொல்கத்தா இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் தெரிவித்துள்ளார்.வங்காளதேச நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து இந்துக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் வங்கதேச அரசை நாங்கள் அழைக்கிறோம் என்றும் கூறியுள்ளார்

கடந்த சனிக்கிழமையன்று,  பார்த்தா தாஸ் என்னும் இஸ்கான் உறுப்பினர் 200 க்கும் மேற்பட்டோர் சேர்ந்த கும்பலால் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் கோவிலை அடுத்த குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் மற்றும் துர்கா பூஜை பந்தல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி, அண்டை நாடுகளிலும் மோதல்களையும் பதற்றத்தையும் தூண்டியது.அங்கு நடந்த வன்முறைகளில் குறைந்தது நான்கு பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
     
"இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வங்காளதேசத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய  அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகம்  வங்காளதேச அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Next Story