கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைய சித்தராமையாவே காரணம்: குமாரசாமி
எடியூரப்பாவுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டதால், கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைய சித்தராமையாவே காரணம் என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
விஜயாப்புராவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
எடியூரப்பாவுடன் உள்ஒப்பந்தம்
ஜமீர் அகமதுகான் என்னை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். என்னை பற்றி சித்தராமையாவால் நேரடியாக பேச முடியாததால், காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் மூலமாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்பு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தது. இதற்கு எடியூரப்பாவுடன் சித்தராமையா செய்து கொண்ட உள்ஒப்பந்தமே காரணமாகும்.
கர்நாடகத்தில் பா.ஜனதா இந்தஅளவுக்கு வளர்ச்சி அடையவதற்கு சித்தராமையாவே காரணம். எனக்கு எதிராக கீழ் மட்டமாக பேசி வரும் ஜமீர் அகமதுகான் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. யார் சொல்லி கொடுத்து ஜமீர் அகமதுகான் பேசுகிறார் என்று எனக்கு தெரியும். மாநிலத்தில் எத்தனையோ இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. அந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஏன் வெற்றி பெறவில்லை.
காங்கிரசுக்கு தோல்வி பயம்
இதற்கு எடியூரப்பாவிடம் இருந்து சித்தராமையா வாங்கி கொண்ட பணமே காரணம். சித்தராமையா தனக்கு தெரிந்த நபரை எடியூரப்பாவை சந்தித்து பணம் வாங்க அனுப்பி வைத்திருந்தார். அந்த நபரே என்னிடம் வந்து இந்த தகவலை பல முறை கூறி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பைரதி பசவராஜ், முனி ரத்னா உள்ளிட்டோர் பா.ஜனதாவுக்கு சென்றது எப்படி?. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக இருந்த சித்தராமையாவால், காங்கிரசில் இருந்து சென்ற எம்.எல்.ஏ.க்களை தடுக்க முடியாமல் போனது ஏன்?.
இதுபற்றி சித்தராமையாவுக்கு தான் தெரியும். அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு போட்டியாக ஜனதாதளம் (எஸ்) கட்சி இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) மற்றும் எனது வளர்ச்சி காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வளர்ச்சியை சகித்து கொள்ள முடியாமல் என்னை குறி வைத்து சித்தராமையாவும், காங்கிரஸ் தலைவர்களும் குற்றச்சாட்டு கூறுகின்றனர். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story