29-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கிய டிராக்டர் பேரணி? - விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை..!


29-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கிய டிராக்டர் பேரணி? - விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை..!
x
தினத்தந்தி 21 Nov 2021 12:18 AM GMT (Updated: 21 Nov 2021 12:18 AM GMT)

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் நிலையிலும் டெல்லியில் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு 3 திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டாக போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற உள்ளதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவை விவசாய அமைப்புகள் வரவேற்று உள்ளன. அதேநேரம் மேற்படி 3 சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் முறைப்படி திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாகவும் விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். பல்வேறு எதிர்க்கட்சியினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வரும் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஏற்கனவே திட்டமிட்டபடி தங்கள் போராட்டத்தை வருகிற நாட்களில் தொடர முடிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் லக்னோவில் நாளை (திங்கட்கிழமை) பொதுக்கூட்டம், டெல்லி போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நாடு முழுவதும் 26-ந்தேதி நடத்தப்படும் போராட்டம், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் 29-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கிய டிராக்டர் பேரணி போன்றவற்றை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து விவசாய தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண பிரசாத் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்ததை சம்யுக்தா கிசான் மோர்ச்சா வரவேற்கிறது. அதேநேரம் நிலுவையில் உள்ள பிற பிரச்சினைகள் குறித்தும் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

அந்தவகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை, மின்சார மசோதாவை ரத்து செய்தல், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்தல், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்தல், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு போன்ற விவகாரங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இது ஒருபுறம் இருக்க, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து விரிவான ஆலோசனை நடக்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ள நிலையில், தங்கள் போராட்டத்தின் எதிர்கால திட்டம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவசாயிகள் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கிடைக்கும்வரை விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும் என ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி அறிவுறுத்தி உள்ளார். அதேநேரம் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் மத்திய அரசின் முடிவை அவர் வரவேற்று உள்ளார்.


Next Story