டெல்லியில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை..!!
டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, காற்று மாசு கட்டுப்பட்டு இருந்து வந்தது. ஆறுகளில் நீரும் தெளிவுடன் காணப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு மிக அதிக அளவில் இருந்தது.
காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் மற்றும் கட்டிடங்கள் இடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காற்றின் மாசு அதிகமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளைத் திறந்தது ஏன்..? என டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கேள்வி எழுப்பியது. மேலும் வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றுமாறு தெரிவித்துவிட்டு, மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியது ஏன்.? என சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “காற்றின் தரம் மேம்படும் என்ற முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பள்ளிகளை மீண்டும் திறந்தோம். இருப்பினும், காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளதால், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story