பாகிஸ்தான் போரின் வெற்றி விழா கொண்டாட்டம்.... பிபின் ராவத் பேசிய வீடியோ ஒளிபரப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 4:52 PM IST (Updated: 12 Dec 2021 4:52 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் போரின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது பிபின் ராவத் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

கடந்த 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதின் 50 ஆண்டு பொன்விழா தினம் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் இன்று கொண்டாடப்பட்டு 'ஸ்வர்னிம் விஜய் பார்வ்' திறக்கப்பட்டது.

பிரமாண்டமான முறையில் இந்த கொண்டாட்டம் நடத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முப்படை தலைமை தளபதியின் திடீர் மரணம் காரணமாக எளிமையான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை இழந்து நாடு சோகத்தில் மூழ்கி இருப்பதால் இவ்விழா எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம் வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் அடைந்திருப்பதை கண்டு இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது” என்று அவர் கூறினார்.  

இதனைத்தொடர்ந்து, பொன்விழாவையொட்டி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசியிருந்த காணொளி பதிவு வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பிபின் ராவத் பேசுகையில், “இந்த ஸ்வர்னிம் விஜய் பார்வ் விழாவில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1971 போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு விழாவை ஸ்வர்னிம் விஜய் பார்வ் என்ற பெயரில் நாம் கொண்டாடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நமது வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

இதற்காக டிசம்பர் 12 முதல் 14 வரை இந்தியா கேட்டில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நமது வீர வீராங்கனைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் விஜய் பார்வ் நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரியது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். நமது படைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்று அதில் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக இந்த வீடியோ பிபின் ராவத் தமிழகத்திற்கு புறப்படுவதற்கு ஒருநாள் முன்பாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தது. அடுத்த நாள் (டிசம்பர் 8) குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




Next Story