காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட உஸ்ரம்பாதிரி கிராமத்தில் பயங்கரவாதி ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பயங்கரவாதி ஒருவர் மறைந்திருந்ததை கண்ட வீரர்கள், அவரை சரணடையுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர் பாதுகாப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பின்னர் அவரைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சோபியானை சேர்ந்த பெரோஸ் அகமது தார் என்பதும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி என்பதும் தெரிய வந்தது. சோபியானில் கடந்த 2018-ம் ஆண்டு 4 போலீசாரை சுட்டுக்கொன்ற சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் தொடர்புடைய இவரை ‘ஏ பிளஸ்’ பட்டியலில் சேர்த்து பாதுகாப்பு படையினர் நீண்ட காலமாக தீவிரமாக தேடி வந்தனர். அவர் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story