பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணியில் இருந்து இயக்கம்


பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணியில் இருந்து இயக்கம்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:16 PM GMT (Updated: 18 Dec 2021 10:16 PM GMT)

பெங்களூருவில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இயங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது மைசூரு ரோடு-பையப்பனஹள்ளி, எலச்சனஹள்ளி-நாகசந்திரா வரை இரு மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சில வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அதன்பின்னர் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக பெங்களூருவில் மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திங்கள் முதல் சனி வரை காலை 6 மணியில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஞாயிறு மட்டும் காலை 7 மணியில் இருந்து ரெயில் இயங்குகிறது.

இந்த நிலையில் பணிக்கு செல்பவர்கள் காலை 5 மணி முதல் மெட்ரோ ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் 20-ந் தேதி (அதாவது நாளை) முதல் காலை 5 மணியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

அதன்படி நாளை(திங்கட்கிழமை) முதல் காலை 5 மணியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயங்குகிறது. திங்கள் முதல் சனி வரை காலை 5 மணிக்கு ரெயில்கள் இயங்க ஆரம்பிக்கும். ஞாயிறு மட்டும் வழக்கம்போல் காலை 7 மணிக்கு ரெயில் இயங்கும்.

Next Story