அதிகரிக்கும் ஒமைக்ரான்: டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Dec 2021 6:46 AM IST (Updated: 29 Dec 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகரிப்பு எதிரொலியாக டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 331 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு பக்கம் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், உயர்மட்ட குழு கூட்டம் ஒன்றை நேற்று கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் 0.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. பெரும்பாலோருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. எனவே பதற்றம் அடையத்தேவையில்லை. சந்தைகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் செல்வது துரதிர்ஷ்டவசமானது. அனைவரும் கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும்கூட மருத்துவ ஆக்சிஜன் பயன்பாடு அதிகரிக்கவில்லை. படுக்கைகளோ, அவசர சிகிச்சை தேவைகளோ அதிகரிக்கவில்லை. பெரும்பாலோர் வீடுகளிலேயே சிகிச்சை செய்து கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

டெல்லியில் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல்திட்டத்தின் நிலை-1 மஞ்சள் எச்சரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் வருமாறு:

* திங்கட்கிழமை (27-ந் தேதி) முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்கி காலை 5 மணி வரை நீடிக்கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் உடனடியாக மூடப்படுகின்றன.

* அத்தியாவசியமற்ற கடைகள், சேவைகள், வணிக வளாகங்கள் ஒரு நாள்விட்டு ஒரு நாள் (ஒற்றைப்படை தேதிகளில்) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

* மெட்ரோ ரெயில்களும், பஸ்களும் 50 சதவீத பயணிகளுடன் இயங்கும். ஆட்டோ ரிக் ஷா, வாடகைக்கார்களில் 2 பேர் பயணிக்கலாம்.

* திருமணம், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

* சமூக, அரசியல், கலாசார, மத, திருவிழா நிகழ்வுகள் கூடாது.

* ஓட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம். இதே போன்றுதான் மதுபார்களும் செயல்பட வேண்டும். ஆனால் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் அவை இயங்க வேண்டும்.

* தனியார் துறை அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். டெல்லி அரசுத்துறை அலுவலகங்களும் இப்படியே இயங்கும்.

* மத வழிபாட்டிடங்கள் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்கள் திறந்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story