உ.பி. தேர்தல்: “சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும்” - முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் கணிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 3:51 AM GMT (Updated: 2022-01-22T09:21:46+05:30)

வரும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும் என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ந்தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும் என்று  உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக-வில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தேசத்தின் முன்னேற்றத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பார்வையை கண்டு அபர்ணா அவரை பின்பற்றும் நோக்கில் பாஜக.வில் இணைந்துள்ளார். ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சூழல் இங்கு இல்லை. 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றும். 

மார்ச் 10ஆம் தேதி அன்று வெளியாக உள்ள தேர்தல் முடிவு, சமாஜ்வாதி கட்சிக்கு அவமானகரமான தோல்வியாக அமையும். தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் அகிலேஷ் யாதவ் சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி வருகிறார். குற்றவாளிகளுக்கும்,  குண்டர்களுக்கும் அவர் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார்” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

Next Story