“உக்ரைனின் கோரிக்கையை இந்தியா ஏற்க வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்


“உக்ரைனின் கோரிக்கையை இந்தியா ஏற்க வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
x
தினத்தந்தி 24 Feb 2022 7:54 PM IST (Updated: 24 Feb 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

ரஷியாவிடம் இந்தியா பேச வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவர் எனவும், அவர் சொன்னால் புதின் குறைந்தபட்சம் அதைப் பற்றி யோசிப்பார் எனவும் இகோர் பொலிகா கூறியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூர் கூறியுள்ளதாவது;-

“உக்ரைனில் 24,000 இந்திய மாணவர்கள் உள்ளனர், அதில் 2,300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என என்னிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. போர் காரணமாக உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர்களை விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அழைத்து வருவதற்கு நடைமுறையில் வழி இல்லை. 

இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கை முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது. வன்முறை மற்றும் போரின் மூலம் மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதையும், ஆட்சி மாற்றத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. 

ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடு. உக்ரைன் மீதான படையெடுப்பில் சில சட்டப்பூர்வமான பாதுகாப்புக் கவலைகள் இருக்கலாம். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா திடீரென மௌனம் சாதிப்பது உக்ரைனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். இந்த சூழலில் இந்தியா அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இணைவதற்கு ஆசைப்படும் இந்தியா போன்ற ஒரு நாடு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் குறித்து முற்றிலும் மௌனமாக இருப்பது நல்ல தோற்றத்தை ஏற்படுத்தாது. 

சீன ராணுவம் நமது நாட்டிற்குள் நுழைந்தால், மற்ற நாடுகள் நமக்காக நிற்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். தற்போதைய சூழலில் இந்தியா ரஷிய அரசிடம் பேச வேண்டும் என்று உக்ரைன் எதிர்பார்த்தால், குறைந்தபட்சம் நாம் அதற்கான முயற்சியை செய்து நமது தரப்பை நிலைநாட்ட வேண்டும்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story