ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை? - போர் முடிவுக்கு வருமா..!


ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை? - போர் முடிவுக்கு வருமா..!
x
தினத்தந்தி 24 Feb 2022 8:08 PM IST (Updated: 24 Feb 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். 

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், போரை நிறுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா இன்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறுகையில், இந்திய பிரதமர் மோடி சொன்னால் ரஷிய அதிபர் புதின் கேட்பார். எத்தனை உலகத் தலைவர்கள்  சொல்வதை புதின் கேட்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மோடி மீது  எனக்கு நம்பிக்கை உள்ளது. 

அவரது மதிப்பான  குரல் காரணமாக, புதின் குறைந்தபட்சம் அதைப் பற்றி (போர் நிறுத்தம்) யோசிப்பார். இந்தியரிடமிருந்து நாங்கள் மிகவும் சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில் உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story