உ.பி. முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 March 2022 4:46 PM GMT (Updated: 2022-03-24T22:16:05+05:30)

உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் நாளை பதவியேற்க உள்ளார்.

லக்னோ, 

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. 

இந்தியாவின் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேசத்தில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் யோகி ஆதித்யநாத் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நாளை உத்தரப்பிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார்.

பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்தத் தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அரசு அமைப்பதற்கு கவர்னரிடம் யோகி ஆதித்யநாத் உரிமை கோரியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில தலைநகா் லக்னோவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளாா்.

பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்கிறாா். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள், பாஜக ஆளும் மாநில முதல்-மந்திரிகள் உட்பட ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story