டெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் கைது
டெல்லியில் 27 பேர் தீ விபத்தில் உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள 3 மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த 13-ந் தேதி மாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 பெண்கள் உள்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேரை காணவில்லை. அவர்களும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
விபத்து நடந்த கட்டிடம் மிகவும் குறுகலான படிக்கட்டுகளை கொண்டதாகவும், வெளியேறுவதற்கு ஒரேயொரு வழியை மட்டுமே கொண்டதாகவும் இருந்தது. மேலும் தீயணைப்பு துறையினரிடம் இருந்து கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழையும் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் விபத்து நடந்த உடனே கட்டிடத்தின் உரிமையாளரான மணிஷ் லக்ரா தலைமறைவாகி விட்டார். எனவே அவரை கைது செய்வதற்காக டெல்லி மற்றும் அரியானாவில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் மூலம் நேற்று மணிஷ் லக்ராவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story