ஒரு மரத்திற்கு இரவு பகலாக 24 மணிநேர ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு..!! எதற்காக...?


ஒரு மரத்திற்கு இரவு பகலாக 24 மணிநேர ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு..!! எதற்காக...?
x

மத்திய பிரதேசத்தில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவில், ஒரு மரத்திற்கு இரவு பகலாக 24 மணிநேரமும் ஆயுதமேந்திய போலீசார் காவல் காப்பதற்கு பின்னணியில் ஒரு வரலாறே உள்ளது.



போபால்,


மத்திய பிரதேசத்தின் ரெய்சன் நகரில் புகழ் பெற்ற சாஞ்சி ஸ்தூபா உள்ளது. இதன் அருகே மரம் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு இரவு பகலாக 24 மணிநேரமும் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அப்படி என்ன இதில் விசேஷம் என்கிறீர்களா?

இதன் பின்னணியில் ஒரு வரலாறே உள்ளது. வட இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தர் அத்தி மரம் ஒன்றின் கீழ் தியானத்தில் ஆழ்ந்து இருந்தபோது, ஞானம் பெற்றார் என நாம் படித்து அறிந்திருக்கிறோம்.

இந்த மரம் போதி மரம் அல்லது ஞானத்திற்கான மரம் என பின்னாளில் அறியப்பட்டது. கிறிஸ்து பிறப்புக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் அசோக சக்ரவர்த்தி இந்த மரம் அமைந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டு, பின்னர் கோவில் ஒன்றை அந்த பகுதியில் எழுப்பினார்.

அதன்பின்பு, அந்த மரத்தின் கிளை ஒன்றை இலங்கைக்கு அதன் அரசர் தேவநம்பிய தீசன் என்பவருக்கு பரிசாக வழங்கினார். அதனை பெற்று கொண்ட மன்னன் தீசன் அதனை அனுராதபுரம் பகுதியில் நட்டுள்ளார். அது பின்னர் மரம் ஆக வளர்ந்து உள்ளது.

இதனை அடுத்து, 2012-ம் ஆண்டில் இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே அந்த மரத்தின் கிளை ஒன்றை எடுத்து வந்து மத்திய பிரதேசத்தின் சலாமத்பூர் பகுதியருகே சிறிய குன்று பகுதியில் அதனை நட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சி மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நடைபெற்றது. இதன் முக்கியத்துவம், பழமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, அதன் பாதுகாப்பு, தண்ணீர் இறைத்தல் ஆகியவற்றுக்காக மாநில அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவிட்டு வருகிறது.

இந்த மரத்திற்கு பாதுகாவலாக 24 மணிநேரமும் ஆயுதமேந்திய போலீசார் 4 பேர் மாற்றி, மாற்றி ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

எனினும், இந்த மரம் தற்போது வேறு வகையான எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. அந்த மரம் இலை கம்பளிப்பூச்சி எனப்படும் ஒரு வகையான பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

அந்த மரத்தின் இலைகளை அது தின்று விடுகிறது. இதனால், மரத்தில் இலைகள் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. இதுபற்றி பாதுகாப்பு பணியாளர்கள் கூறும்பொது, மரத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தடுக்க தேவையான நடவடிக்கையை தோட்ட கலை துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

2,500 ஆண்டுகள் பழமையான மரத்தின் கிளை இன்றளவும் துளிர் விட்டு, பெரிய மரம் ஆக வளர்ந்து அதன் பெருமையை பறைசாற்றி வரும் நிலையில், அதனை பாதுகாப்பதில் அரசின் கவனம் செலுத்தப்படாதது குறையாக கூறப்பட்டு வருகிறது.


Next Story