மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பெறுவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது - மத்திய மந்திரி பேட்டி


மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பெறுவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது - மத்திய மந்திரி பேட்டி
x

கோப்புப்படம்

முக அடையாளத்தை கொண்டு ஆட்களை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறுவதை மத்திய அரசு ஊக்குவிப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

புதுடெல்லி,

மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆண்டுதோறும் நவம்பர் மாதம், ஓய்வூதியம் தொடர்பான அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. இது, அதிக வயதான, நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதற்கு தீர்வாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பெறுவதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இன்னும் வெளிப்படையான, எளிமையான பயன்பாட்டுக்காக முக அடையாளத்தை வைத்து ஆட்களை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பம் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பெறும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதுகுறித்து நாடு முழுவதும் ஸ்ரீநகர் முதல் நாகர்கோவில் வரை கடந்த 1-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 25 லட்சம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன.

அவற்றில், 2 லட்சத்து 20 ஆயிரம் சான்றிதழ்கள், ஆதாரை பயன்படுத்தி, முக அடையாளத்தை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அளிக்கப்பட்டன.

எளிமையான, வெளிப்படையான பயன்பாட்டை உறுதி செய்ய இந்த தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 'ஜீவன் பிரமான்' என்ற இணையதளம் அல்லது செல்போன் செயலி மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்களை பெறலாம்.

இன்னும் 2 வாரங்களில், மேலும் 14 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story