மராட்டியம்: வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் காருக்குள் இருந்து சடலமாக மீட்பு


மராட்டியம்: வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் காருக்குள் இருந்து சடலமாக மீட்பு
x

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பரூக் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தவுபிக் கான் (4), அலியா(6), அப்ரீன் கான்(6). இதில் தவுபிக் கான் மற்றும் அலியா இருவரும் உடன் பிறந்தவர்கள். அப்ரீன் கான் இவர்களின் உறவுக்கார பையன். இவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காவுக்கு 17-ம் தேதி விளையாட சென்றிருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தைகளை தேடினர்.

குழந்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே பெற்றோர் இரவு 7 மணியளவில் போலீசாரிடம் புகார் அளித்தனர். குழந்தைகளை யாரோ கடத்தி சென்றிருப்பார்கள் என எண்ணி போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதித்தனர். இரவு தொடங்கி அடுத்த நாள் பகல் வரை நடத்திய சோதனையில் பலன் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டினை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மெக்கானிக் ஷெட் ஒன்று இருந்துள்ளது. அங்கு பழுது பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்த எஸ்யூவி காரில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் கதவை உடைத்து பார்த்தனர். அதில் தொலைந்து போன மூன்று குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.

அந்த காரானது சுமார் 10 நாள்களுக்கு மேலாக அங்கேயே நின்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த காரில் குழந்தைகள் ஏறி விளையாடியுள்ளனர். அப்போது கார் கதவு பூட்டியதனால் குழந்தைகளால் வெளியே வர முடிவில்லை. இதனால் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உடற்கூறு ஆய்விற்கு பின்னரே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story