பெங்களூருவுக்கு 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்'


பெங்களூருவுக்கு 3 நாட்கள் மஞ்சள் அலர்ட்
x

கனமழை எதிரொலியாக பெங்களூருவுக்கு 3 நாட்கள் ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

சாலைகளில் தேங்கிய மழைநீர்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்த கனமழையால் அங்கு உள்ள ஒரு ஏரி நிரம்பியது.

'மஞ்சள் அலர்ட்'

மேலும் தேவனஹள்ளி பழைய, புதிய பஸ் நிலையங்களை மழைநீர் சூழ்ந்து கொண்டது. விமான நிலையத்தில் இருந்து தேவனஹள்ளிக்கு வரும் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ், கார்கள், மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் அந்த வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றன. இந்த நிலையில் பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களும் நகரில் 6 முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story