பீகாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு


பீகாரில்  ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை  உயிருடன் மீட்பு
x

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

பாட்னா,

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் என்ற கிராமத்தை சேர்ந்த சிவம் குமார் என்ற 3 வயது குழந்தை நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் வயலில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது வயலில் மூடாமல் விடப்பட்டிருந்த 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. உடன் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் இது பற்றி உடனடியாக சிவம் குமாரின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் சுமார் 5 மணி நேரம் கடுமையாக போராடி குழந்தையை உயிருடன் மீட்டனர். அதை தொடர்ந்து, உடனடியாக குழந்தை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தின் கஜாரி பர்கேடா கிராமத்தில் 20 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி அண்மையில் மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பீகாரில் நிகழ்ந்த இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story