37 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்துடன் கவர்னருக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம்


37 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்துடன் கவர்னருக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம்
x

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) என்ற பெயரில் இந்த கூட்டணி அரசு கடந்த 2½ ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீர் அரசியல் பூகம்பம் ஏற்பட்டது.

ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் சிவசேனாவில் அதிருப்தி அணி உருவானது. அந்த கட்சியின் ஒருபகுதி எம்.எல்.ஏ.க்கள் குஜராத் மாநிலம் சூரத் சென்று பின்னர் அங்கிருந்து இடம்மாறி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் முகாமிட்டனர். இன்று 5- வது நாளாக இந்த அரசியல் குழப்பம் நீடித்தது.

அதிருப்தி அணிக்கு மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தாவினர். இதனால் சிவசேனாவில் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் அதிருப்தி அணியின் பலம் 37 ஆக அதிகரித்ததாக கூறப்பட்டது. இவர்கள் தவிர சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 பேரும் அவர்களுடன் முகாமிட்டனர். அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி பலத்தை காட்டினார். எம்.வி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று அவர்கள் உத்தவ் தாக்கரேயை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை குழு தலைவர் பெயரையும் அதற்கு ஆதரவாக 37 எம்.எல்.ஏக்கள் கையெழுத்தையும் இட்டு மராட்டிய கவர்னருக்கும் துணை சபாநாயகருக்கு ஏக்னாத் ஷிண்டே தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே, துணை சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த நிலையில், பதிலடியாக ஏக்னாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.


Next Story