கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,834 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மண்டியா:-

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு

கர்நாடகம்-தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக பருவமழை பொய்த்துபோகும் நேரத்தில் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. தற்போது குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

இதனிடையே கடந்த சில நாட்களாக காவிரி ஒழுங்காற்று குழுவின் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை முதல் தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறப்பு

124 அடி கொண்ட கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணைக்கு நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 2,978 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 97.16 அடியாக உள்ளது. இதில், வினாடிக்கு 3,564 கன அடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கால்வாயிலும், வினாடிக்கு 2,171 கன அடி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட மைசூரு கபினி அணைக்கு வினாடிக்கு 3,525 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 2,276 அடியாக உள்ளது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 1,663 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது. 2 அணைகளில் இருந்து ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 3,834 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


Next Story