பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் சாலை விபத்துகளில் 416 பேர் சாவு


பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் சாலை விபத்துகளில் 416 பேர் சாவு
x

பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் சாலை விபத்துகளில் 416 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதே உயிரிழக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும்படியும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டாம் என்றும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கூறிவருகின்றனர். ஆனாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் செல்வதால் விபத்துகள் நடந்து உயிர் பலி ஆகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அதன்படி, பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 416 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், அவர்கள் ஹெல்மெட் அணியாமலும், தரமற்ற ஹெல்மெட் அணிந்து சென்றதும் முக்கிய காரணம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் கடந்த ஆண்டு (2022) 3 ஆயிரத்து 823 விபத்துகள் நடைபெற்றிருந்தது. அதில், 771 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த ஆண்டில் கடந்த 6 மாதத்தில் (ஜூன் வரை) 2,354 விபத்துகள் நடந்திருப்பதும், அதில் 416 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கையும், பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 70 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாகி இருப்பதும், தரமான ஹெல்மெட்டை அணிந்து சென்ற 30 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து இருப்பதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஒட்டிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 25 லட்சத்து 61 ஆயிரத்து 827 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தரமற்ற பாதியளவு கொண்ட ஹெல்மெட்டை அணிந்து செல்வோர் மீதும் சிக்னல்களில் இருக்கும் கேமராவில் பதிவாகும் காட்சிகள் மூலமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூருவில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளே பெரும்பாலும் உயிர் இழந்து வருகின்றனர். அதனால் தான் தரமற்ற ஹெல்மெட் அணிய வேண்டாம் என்று வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தரமான ஹெல்மெட் அணிவதன் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினாலும், உயிர் பலியாவதில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் யாரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

1 More update

Next Story