காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன்-சிறுமி உள்பட 5 பேர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன்-சிறுமி உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

மண்டியா அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவைச் சேர்ந்த சிறுவன், சிறுமி உள்பட 5 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

மண்டியா:

மண்டியா அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவைச் சேர்ந்த சிறுவன், சிறுமி உள்பட 5 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர்கள்

பெங்களூரு நீலச்சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் அஷ்ரக்(வயது 28). இவரது குடும்பத்தினர் அபிகா(22), தாஸ்மியா(22), மேதாப்(10) மற்றும் அனிஷா பேகம்(10). இவர்கள் 5 பேரும் பெங்களூருவில் இருந்து மண்டியா (மாவட்டம்) தாலுகா தொட்டகொத்தகெரே கிராமத்தில் வசித்து வரும் தங்களது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்தனர். நேற்று காலையில் அவர்கள் கிராமத்தையொட்டி ஓடும் காவிரி ஆற்றில் குளித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறுவன் மேதாப் திடீரென ஆற்றில் மூழ்கி தத்தளித்தான். இதனால் பதற்றம் அடைந்த அஷ்ரக் மற்றும் அபிகா ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

தேடும் பணி

இதனால் பதறிப்போன மற்றவர்கள் அவர்களை காப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கினர். இவ்வாறாக 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம இளைஞர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ஆற்றில் அவர்கள் 5 பேரையும் தேடினர். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர்.

இதில் அஷ்ரக், அபிகா மற்றும் மேதா ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். தாஸ்மியா மற்றும் அனிஷா பேகமும் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்களுடன் தேடிவருகிறார்கள். நேற்று இரவு நேரம் ஆனதால் அவர்களது உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது. அவர்களது உடல்களை தேடும் பணி இன்று(புதன்கிழமை) தொடரும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து அறிந்த பசராலு போலீசார் விரைந்து வந்து அஷ்ரக் உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story