பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் - 5 பேர் கைது
பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஜுனைத், சோஹில், உமர், முடசர், ஜஹித் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைவரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பயங்கரவாத அமைப்பு பயிற்சி வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.