பெங்களூருவில் பயங்கரவாதிகள் 5 பேர் கைது


பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டிய 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு:

கர்நாடகத்தை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு (2022) தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் குண்டு வெடித்தது. இதுதொடர்பாக பயங்கரவாதி ஷாரிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் சிலர், நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு பதுங்கி இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளை கண்காணித்து தீவிர சோதனையும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுல்தான்பாளையா, கனகநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 5 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

மேலும் அந்த வீட்டில் கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாக்கி-டாக்கி, வெடி மருந்துகள், செல்போன்கள் போன்றவை இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பிடிபட்டவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது பிடிபட்டவர்கள் சையது சுகைல், உமர், ஜாகித், முதாசீர் மற்றும் பைசல் ஆகியோர் என்பதும், அவர்கள் பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்து 12 செல்போன்கள், 45 தோட்டாக்கள், 7 கைத்துப்பாக்கிகள், வாக்கி-டாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பெங்களூருவில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டது தெரிந்தது. மேலும் அவர்கள் 5 பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது.

சிறையில் இருந்தபோது 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நசீர் மற்றும் தொழில் அதிபர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜுனைத் ஆகிய 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்களின் அறிவுரையின்படி பெங்களூருவில் பயங்கரவாத திட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சிறையில் இருந்து வெளியான 5 பேரும் கூட்டாக சுல்தான்பாளையா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியிருந்து வந்துள்ளனர். அங்கு வைத்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்து போன்றவை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதனை நேற்று போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் மற்றும் வாக்கி-டாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆர்.டி.நகரில் தொழில் அதிபர் கொலை வழக்கில் கைதான 5 பேரும், ஜுனைத்தும் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த சமயத்தில், பெங்களூருவில் கடந்த 2008-ம் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு சேர்ந்த பயங்கரவாதி நசீர் என்பவருடன் ஜுனைத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

அதன் பிறகு நசீரும், ஜுனைத்தும் சேர்ந்து தற்போது கைதாகியுள்ள 5 பேரையும் நாசவேலையில் ஈடுபடுத்த மூளைச்சலவை செய்துள்ளனர். அதன்படி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த 5 பேரும் சுல்தான்பாளையாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளனர். அங்கிருந்தபடி அவர்கள் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட ஆயுதங்கள், வெடி பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து வந்துள்ளனர். தற்போது அவர்களை கைது செய்துள்ளோம்.

கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக நசீரும், 2-வது குற்றவாளியாக ஜுனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய ஜுனைத் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதாகியுள்ள 5 பேரும் வெடிகுண்டுகளை தயாரிக்கவும், ஆயுதங்களை கையாளவும் பயிற்சி பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் மெஜஸ்டிக் பி.எம்.டி.சி. பஸ் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் குண்டுகளை வைத்து வெடிக்க செய்து நாசவேலையில் ஈடுபட தயாராகி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கைதான 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது 5 பேரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து நீதிபதி அவர்களுக்கு 15 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு நகரில் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story