கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்பு


கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்பு
x

பெங்களூருவில் போக்குவரத்து சிக்னல்களில் கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து சிக்னல்களில் கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

பெங்ளூருவில் போக்குவரத்து சிக்னல்களில் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் பிச்சையெடுப்பது அதிகரித்து வந்தது. குறிப்பாக குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுப்பதாகவும் புகார்கள் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சமீபத்தில் பெங்களூரு போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சையெடுக்கும் நபர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தனிப்படை போலீசார் பெங்களூரு நகர் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

குழந்தைகளுடன் 55 பேர் மீட்பு

இந்த சோதனையின் போது நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் போலீசாரிடம் சிக்கி இருந்தனர். அதாவது 3 சிறுவர்கள், 5 சிறுமிகள், கைக்குழந்தைகளுடன் இருந்த 17 தாய்மார்கள், 8 குழந்தைகள், 5 பெண்கள், வயதானவர்கள், ஆண்கள் என ஒட்டு மொத்தமாக 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் நல காப்பகத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மாநில மகளிர் பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் பிழைக்க வழியின்றி பிச்சையெடுக்க வந்தார்களா?, சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளை வேறு இடத்தில் இருந்து கடத்தி வந்து ஏதேனும் கும்பல் பிச்சை எடுக்க வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தெரிவித்துள்ளார்.


Next Story