வெளிநாட்டில் கார் விபத்தில் ஆந்திர எம்.எல்.ஏ-வின் உறவினர்கள் 6 பேர் பலி


வெளிநாட்டில் கார் விபத்தில் ஆந்திர எம்.எல்.ஏ-வின் உறவினர்கள் 6 பேர் பலி
x

இறந்த 6 நபர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கம் உதவி செய்து வருகிறது.

அமலாபுரம்

அமெரிக்காவின் கிளெபர்ன் நகரின் சந்தை சாலையில் உள்ள நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலியானவர்கள் பி.நாகேஷ்வர் ராவ், சீதா மகாலட்சுமி, நவீனா, கிருத்திக், நிஷிதா மற்றும் அவர்களுடைய உறவினரான மற்றொரு நபர் என அடையாளம் காணப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பி. வெங்கட சதீஷ் குமாரின் சித்தப்பா நாகேஷ்வர் ராவ் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எம்.எல்.ஏ பி. வெங்கட சதீஷ் குமார் கூறியதாவது,

எனது சித்தப்பா, சித்தி, அவரது மகள், இரண்டு பேரக்குழந்தைகள் மற்றும் மற்றொரு உறவினர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் இருந்து நேற்று டெக்சாஸில் உள்ள உறவினர் விஷாலின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த துயரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களின் பெயர்களை வெளியிடாமல், முதலில் லாரியில் இருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் இந்த சம்பவம் பற்றியும் உயிரிழந்தவர்களின் விவரங்களை பற்றிய தகவலையும் வெளியிட்டன.

இறந்த 6 நபர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கம் உதவி செய்து வருகிறது. மேலும், இந்த விபத்தில் உயிர் பிழைத்த லோகேஷ் என்ற நபர், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story