மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி


மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
x

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மணிக்கா கிராமத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் கடந்த திங்கட்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், கூச்சலிட்டனர். அதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதனிடையே சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

70 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில், 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டதால் மீட்பு பணி பெரும் சவாலானது. இதையடுத்து, மாநில பேரிடர் மீட்பு குழு உள்பட பல்வேறு மீட்பு குழுக்கள் களத்தில் இறங்கி சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. எனினும் அவர்களின் தீவிர முயற்சி பலனளிக்கவில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் நேற்று மாலை பிணமாக மீட்கப்பட்டான்.


Next Story