கர்நாடகாவில் கனமழை: 7 பேர் உயிரிழப்பு


கர்நாடகாவில் கனமழை: 7 பேர் உயிரிழப்பு
x

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கினாலும், மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அணைகளும் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இந்த மாத தொடக்கத்தில் சில நாட்கள் பலத்த மழை கொட்டியது.

மாநிலத்தில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. ஆனால் அதன்பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை எதுவும் பெய்யாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கனமழையால் விளைநிலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கிருஷ்ணா, பீமா, வரதா, தூத்கங்கா, மல்லபிரபா, துங்கா, ஷராவதி, நேத்ராவதி, குமாரதாரா, காளி, காவிரி, லட்சுமண தீர்த்தா உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. ஏராளமான தரைமட்ட பாலங்களை மூழ்கடித்தப்படி மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எல்லை மாவட்டமான பெலகாவியில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது


Next Story